புதுக்கோட்டை: தண்ணீர் இன்றி கருகும் நெல் வயல்களுக்கு, குடிநீர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் சம்பா நெல்கள் நடவு செய்திருந்தனர்.
தற்போது, நெற்பயிற்கள் வளர்ந்து, கதிர் முற்றிய நிலையில், போதிய மழையில்லாததாலும், அருகில் உள்ள நாவல் ஏரி வற்றியதாலும், வயல்கள் காய்ந்து நிலத்தின் தரைப்பகுதிகள் வெடித்து பயிர்கள் கருகி வருகின்றன. ஒரு ஏக்கருக்கு 10,000 ரூபாய் வரை செலவு செய்து நடவு செய்திருந்தனர்.
இத்தகைய பயிரை காப்பாற்ற, விவசாயிகள் ஒரு சிலர், தண்ணீர் லாரிகள் மூலம் ஒரு நடைக்கு 1,000 ரூபாய் வீதம் கொடுத்து, தண்ணீர் வாங்கி கருகி வரும் நெற்பயிர்களுக்கு பாய்ச்சி விவசாயம் செய்கின்றனர். லாரிகளில் தண்ணீர் வாங்கி நெற்பயிர்களை காப்பற்ற போதிய பணம் இல்லாத சில விவசாயிகள், கருகிய வயல்களில் மாடுகளை மேய்த்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, விவசாயி அசோக் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில், மழை பெய்து நாவல் ஏரியில் தண்ணீர் இருந்ததால் தொடர்ந்து மழை பெய்யும் என்று நம்பிக்கையில், நாங்கள் சம்பா நெல்களை நடவு செய்து வந்தோம். தற்போது, பயிர்கள் நெல்கதிர் விட்டு வரும் நிலையில் தண்ணீர் இன்றி காய்ந்து வருவதால், குடிநீர் லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயிரை காப்பற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காயும் பயிருக்கு குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில், வயல்களில் தண்ணீர் இன்றி கருகும் நெல் பயிர்களுக்கு, விவசாயி ஒருவர், பணம் கொடுத்து, குடிநீர் லாரிகள் மூலம் வாங்கி, தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.
