புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை.

புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. அவர் பாஜவின் சி டீம் தான் என அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசியலில் புதிதாக வந்திருக்கும் நடிகர் விஜயை, நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர், பாஜவின் சி டீம் தான், அமித் ஷாவின் ஸ்லீப்பர்செல் தான் என நான் அடித்துச் சொல்கிறேன். விஜய் பாஜவுடன் கூட்டணி வைத்தாலும், எங்களுக்கு கவலை இல்லை.

சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி நிலவினாலும் எங்களுக்கு கவலையில்லை. வலுவாக அமைந்துள்ள திமுக கூட்டணிக்கே வெற்றி என உறுதி செய்யப்பட்டு விட்டது. எத்தனை அணி வந்தாலும் எங்களுடைய அணி வலுவான அணி; எங்களை வீழ்த்த முடியாது.

விஜய், ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்குகிறார் என தவெகவினர் கூறுகின்றனர். தியேட்டர் டிக்கெட்டுகளை ‘பிளாக்’கில் விற்றால்தான், அந்தளவு தொகையை அவர் சம்பளமாகப் பெற முடியும்.

ஒரு டிக்கெட் விலை 80 ரூபாய் என்றால், ‘பிளாக்’கில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். அப்படியென்றால், 920 ரூபாய் கருப்பு பணத்தை தான் சம்பளமாக பெறுகிறார். இதையெல்லாம் பேசினால் விஜய் மாட்டிக்கொள்வார். அது தெரியாமலும் அறியாமலும் அவர் பேசி வருகிறார்.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடை போக்குவதற்கான திட்டங்களை, முதல்வர் தீட்டி வருகிறார். நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைவு தான். திமுக அரசு, எந்த குற்றவாளியையும் தப்பவிடவில்லை; காப்பாற்றவும் இல்லை.

நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், கைது செய்கின்றோம். விரைந்து தண்டனை வாங்கி தருகின்றோம். ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் காவல் துறையை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. மானாமதுரையில் நடந்து வரும் போராட்டத்தை விரைவில் முதல்வர் முடிவுக்கு கொண்டு வருவார்.

இவ்வாறு ரகுபதி பேட்டியின் போது கூறினார்.

Source link