புதுக்கோட்டை; நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. எனவே திமுக மிரட்டியதாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய்.
இன்றைய விஜய் கட்சியினர் அதை சொல்கின்றனர் என்றால், அரசியல் ஆதாயம் கருதி அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சொல்லலாம். ஆனால் எங்களை பொறுத்தவரை அவர் எங்கள் நண்பர்.
1996ல் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் எங்களின் மரியாதைக்குரிய நண்பர் ரஜினிகாந்த். எனவே அவரை பற்றி எந்த குறையும் திமுகவை பற்றி சொல்லாதீர்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் வேற வேலை எதுவும் இல்லாமல் சொல்லி வருகின்றன. சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். இங்கு தான் தற்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது.
மானாமதுரை சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. தவறு செய்த யாரையும் முதல்வர் காப்பாற்றமாட்டார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியும். அதிமுக ஆட்சியில் தினசரி எத்தனை லாக்கப் மரணங்கள் நடந்திருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.. அந்தளவு மரணங்கள் நடந்திருக்கிறது.
லாக்கப் மரணங்கள் அதிமுக ஆட்சியில் கிடையாது, திமுக ஆட்சியில் 27 லாக்கப் மரணங்கள் என்று சொன்னால் அதைவிட அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. எங்களை பொறுத்தவரை லாக்கப் மரணங்கள் அதற்கும் உரிய விசாரணை நடத்தி, தண்டனை வழங்கப்படும். நாங்கள் யாரையும் அடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
2026ல் நாங்கள் தான் ஜெயிக்க போகிறோம் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. தேஜ கூட்டணிக்கும் தெரிந்துவிட்டது. அதனால் தான் அவர்கள் தொகுதிபங்கீடு பேச்சு வார்த்தையை இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். தொகுதி உடன்பாடு கூட பண்ண முடியாமல் உள்ளனர்.
எத்தனை கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தாலும் இன்றைக்கு தமிழகத்தில் திமுக கூட்டணியை எதுவுமே செய்ய முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேர்கிறாரா என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம். அது எங்களுக்கு தெரியாது.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
