சென்னை: சென்னை அணியின் ‘பேட்டிங் வரிசை’ மாறுகிறது. துவக்கத்தில் ருதுராஜ், சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளனர்.
பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரின் 19வது சீசன் நாளை துவங்குகிறது. வரும் 30ல் கவுகாத்தியில் நடக்கும் தனது முதல் லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் சென்னை அணி, ராஜஸ்தானை சந்திக்கிறது. கடந்த முறை ராஜஸ்தான் அணி கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், இம்முறை சென்னை அணிக்காக அசத்த உள்ளார்.
உலக நாயகன்: சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில், துவக்க வீரராக மிரட்டினார் கீப்பர்-பேட்டரான சாம்சன். வரிசையாக 3 அரைசதம் கடந்த (97*, 89, 89) இவர், 5 போட்டியில் 321 ரன் (ஸ்டிரைக் ரேட் 199.37) விளாசி, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார். பிரிமியர் அரங்கில் 3 சதம், 26 அரைசதம் உட்பட 4704 ரன் (177 போட்டி) எடுத்துள்ளார். மறுபக்கம் கேப்டன் ருதுராஜ், 2,502 ரன் (71 போட்டி) எடுத்துள்ளார். சென்னை அணிக்காக ஆரம்பத்தில் துவக்க வீரராக செயல்பட்டார். கடந்த ஆண்டு மூன்றாவது வீரராக வந்தார். 5 போட்டியில் (122 ரன்) விளையாடினார். பின் முழங்கை காயத்தால் விலக, கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். ருதுராஜுக்கு பதிலாக இடம் பெற்ற இளம் ஆயுஷ் மாத்ரே, 18, துவக்க வீரராக 7 போட்டியில் 240 ரன் (ஸ்டிரைக் ரேட் 188.97) விளாசினார். இந்த ஆண்டு மாத்ரே தலைமையிலான இந்திய அணி (19 வயதுக்கு உட்பட்ட) உலக கோப்பை வென்றது.
இதனால், இம்முறை துவக்கத்தில் சாம்சன்-மாத்ரே களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 3வது இடத்தில் ருதுராஜ், 4 அல்லது 5வது இடத்தில் பிரவிஸ், அவரை தொடர்ந்து ஷிவம் துபே, தோனி வர வாய்ப்பு இருந்தது. இது பற்றி ருதுராஜ் கூறுகையில்,”துவக்கத்தில் நானும் (ருது) சஞ்சுவும் களமிறங்க உள்ளோம்,”என்றார். இதன்படி 3வது இடத்தில் தான் மாத்ரே வர உள்ளார்.
மீண்டும் வாய்ப்பு: கடந்த ‘சீசனில்’ சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரச்சின் ரவிந்திரா, கான்வே, ராகுல் திரிபாதி தடுமாறினர். மாத்ரே, பிரவிஸ் வந்த பிறகு தான் ‘பவர்பிளே’யில் அதிக ரன் குவித்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணியில், மாத்ரே 3வது இடத்தில் தான் பேட் செய்தார். ஒருவேளை ருதுராஜ் அல்லது சாம்சன் அதிரடியாக ரன் சேர்க்க தவறினால், மீண்டும் துவக்க வீரராக மாத்ரே களமிறக்கப்படலாம்.
இந்திய அணி முன்னாள் ‘ஸ்பின்னர்’ அஷ்வின் கூறுகையில்,”ருதுராஜ்-சாம்சன் சேர்ந்து வலுவான துவக்கம் தருவர். இருவரும் வெவ்வேறு ‘ஸ்டைலில்’ பேட் செய்யக்கூடியவர்கள். இவர்களது சிறந்த ஆட்டத்தை காண காத்திருக்கிறேன்,”என்றார்.
துவக்க விழா ரத்து
பிரிமியர் கிரிக்கெட் 19வது சீசன் நாளை பெங்களூருவில் துவங்குகிறது. கடந்த ஆண்டு (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடந்த பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மரணமடைந்தனர். இத்துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இந்த ஆண்டு துவக்க விழாவை நடத்த வேண்டாம் என, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.
சுப்மன் கில் எதிர்ப்பு
குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், ”பிரிமியர் தொடரில் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறை தேவையில்லை. இது, வீரரின் திறமையை பாதிக்கும். கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் போட்டி. கூடுதலாக ஒரு வீரரை சேர்ப்பதால் போட்டியின் முடிவு ஏதாவது ஒரு அணிக்கு சாதகமாகிவிடும்,” என்றார்.
