புதுச்சேரியிலும் பா.ஜ., கூட்டணியை விரட்டியடிப்போம்: உதயநிதி உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க பிரதமர் மோடிக்கு மனமில்லை,” என, தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. புதுச்சேரியில் போட்டியிடும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இறுதிகட்ட பிரசாரத்தில் உதயநிதி ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.,வின் மக்கள் விரோத திட்டங்களை சோதிக்கும் இடமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர்.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி, அதன் வாயிலாக, குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து விட்டனர்.

மாநில அரசும், மத்திய அரசும் ஒரே அணியில் இருந்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என, பிரதமர் மோடி சொல்கிறார்.

அவர் சொல்லும், ‘டபுள் என்ஜின் சர்க்காரால்’, புதுச்சேரியில் ஏதேனும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா, உரிமைகள் கிடைத்தனவா? தமிழகத்தில் அ.தி.மு.க., மீது சவாரி செய்வது போல, புதுச்சேரியில் என்.ஆர்.காங்., மீது பா.ஜ., சவாரி செய்கிறது.

புதுச்சேரி மீது அக்கறை இருந்தால், நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடிக்கு மனமில்லை.

புதுச்சேரி பல்கலையில், மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டோம். அதையும் தர மத்திய அரசு மறுக்கிறது.

புதுச்சேரியை டில்லியில் இருந்து ஆள பா.ஜ.,வினர் முடிவு செய்து விட்டனர். இந்த நிலையை மாற்ற, தமிழகம் போலவே, புதுச்சேரியிலும் தே.ஜ., கூட்டணியை விரட்டி அடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link