– நமது நிருபர் –
காங்கிரஸ் மேலிட தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், ‘இண்டி’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, புதுச்சேரியில் 6ம் தேதி பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம், முதல்வர் ஸ்டாலினும் புதுச்சேரியில் இருப்பதால், இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகள், தி.மு.க., 14 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க., தனக்கு ஒதுக்கிய தொகுதிகளில் ஒன்றை, வி.சி.க.,வுக்கு ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக வி.சி.க., அறிவித்து உள்ளது.
இந்நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் தவிர, தி.மு.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
வரும் 9ம் தேதி, அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது; 7ம் தேதி பிரசாரம் முடிவதால், 6ம் தேதி ராகுல் புதுச்சேரி வருகிறார். ‘இண்டி’ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அதே நாளில், முதல்வர் ஸ்டாலினும், தட்டாஞ்சாவடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ராகுலும், ஸ்டாலினும் புதுச்சேரியில் இருப்பதால், இருவரும் ஒரே மேடையில் பேசுவரா என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
