புதுச்சேரி தேர்தல் களத்தில் மொத்தம் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கினர். குறைவான நாட்களே இருந்ததால் வேட்பாளர்கள் அனைவரும் காலை, மாலை என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாட்கள் குறைவாக இருந்ததால், புதுச்சேரியில் முதல்முறையாக வேட்பாளர்களின் மனைவி, மகன், மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடுஷோவும், மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, அர்ஜூன்ராம்மெக்வால், பாஜனதா தேசிய தலைவர் நிதின்நபின், தமிழக தலைவர்கள் அண்ணாமலை, குஷ்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்பி ஆகியோரும் தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம், ரோடு ஷோ, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளனர்.
