புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜ 14 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த அரசின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிகிறது. சட்டசபை தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், புதுச்சேரியில் தற்போது என்.ஆர். காங்.- பாஜ கூட்டணி மீண்டும் தொடர்கிறது. கூட்டணி உறுதியானபோதும், தொகுதி பங்கீடு பற்றிய எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந் நிலையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி மாநில பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மாண்டவியா இன்று புதுச்சேரி வந்தார். முதல்கட்டமாக பாஜவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து, என்.ஆர். காங். பாஜ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார். என்.ஆர். காங். தரப்பில் அக்கட்சியின் தலைவரும்,முதல்வருமான ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரும், பாஜ தரப்பில் மான்சுவிக் மாண்டவியா, பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் ஆலோசனை நடத்தினர்.
முடிவில்,புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜ 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவரத்தை வெளியிட்டுள்ள மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜ களம் இறங்கும் 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது;
கடந்த தேர்தலில் இருந்த அதே நடைமுறை தான் இம்முறையும் தொடரும். எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும். அதிமுகவுக்கு எத்தனை தொகுதி என்பது பற்றி இன்னும் பேசவில்லை. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை அமல் ஆகும் முன்னதாக தொகுதி பங்கீடு பற்றி முழுமையாக தெரிவித்துவிடுவோம்.
இவ்வாறு நிர்மல்குமார் சுரானா கூறினார்.
