புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆளும் என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, நேற்று புதுச்சேரி வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளரை சந்திக்க மறுத்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான முதல்வர் ரங்கசாமி, திருச்செந்துார் புறப்பட்டு சென்றார். இதன் வாயிலாக, ‘கூட்டணியை தொடர விருப்பமில்லை’ என, அவர் சூசகமாக தெரிவித்திருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த 2021 தேர்தலை போன்றே, என்.ஆர்.காங்., – பா.ஜ., – அ.தி.மு.க., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து, இந்த தேர்தலையும் சந்திப்பது என முடிவானது. இதை, கடந்த மாதம் காரைக்காலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி உறுதி செய்தார்.
அப்போது, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., 16, மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில், என்.ஆர்.காங்., ஆட்சியை கடுமையாக விமர்சித்த, தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க பா.ஜ., முடிவு செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்த, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 16ம் தேதி புதுச்சேரி வந்தார்.
அவரை சந்திக்க மறுத்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்.
நிபந்தனை
மத்திய அமைச்சரை சந்தித்த ஐவர் குழுவினர், ‘உங்களுக்கு நாங்கள் வேண்டுமா அல்லது ல.ஜ.க., வேண்டுமா என்பதை முடிவு செய்து கூறுங்கள்; அவர்கள் வேண்டுமானால், நாங்கள் வெளியேறுகிறோம்’ என நிபந்தனை விதித்துவிட்டு வெளியேறினர்.
இதை தொடர்ந்து, மன்சுக் மாண்டவியாவுடன் டில்லி சென்ற புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், கட்சி முன்னணி நிர்வாகிகளிடம் முதல்வரின் கருத்தை தெரிவித்தனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ரங்கசாமியின் நிபந்தனை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், ‘கூட்டணியில் இணையும் ல.ஜ.க.,வால், அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது; அதை பா.ஜ., பார்த்துக் கொள்ளும்’ என கூறி, ரங்கசாமியை சமாதானப்படுத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரங்கசாமி நேற்று முன்தினம் மாலை, சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம், ‘பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு தொடர்கிறது’ என்று மட்டும் கூறினார். பின்னர், அங்கிருந்து அன்று இரவே புதுச்சேரி திரும்பினார்.
பா.ஜ., குழு அதிர்ச்சி
இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச, டில்லியில் இருந்து மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் நேற்று தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தனர்.
இவர்கள், நேற்று மதியம் 12:00 மணிக்கு முதல்வரை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். அது குறித்து முதல்வர் ரங்கசாமிக்கும் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரி திரும்பிய ரங்கசாமி, நேற்று காலை வழக்கம் போல், தன் வீட்டில் உள்ள மைதானத்தில் டென்னிஸ் விளையாடினார்.
பின்னர், ஆரோவில் சென்று காபி குடித்தவர், மீண்டும் வீடு திரும்பினார். அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் அமைச்சர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள், அவரது வீட்டில் கூடியிருந்தனர்.
டில்லியில் இருந்து பேச்சு நடத்த வரும் பா.ஜ., குழுவினரை வரவேற்க, அவர்கள் தயாராக காத்திருந்தனர்.
இந்நிலையில், காலை 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்வரின் உதவியாளர், ‘முதல்வர் திருச்செந்துார் செல்கிறார்; காரை தயார் நிலையில் வைக்க வேண்டும்’ என கூறினார். அதை கேட்டு, அவரது கட்சி நிர்வாகிகளே திகைத்தனர்.
காலை 11:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த ரங்கசாமி, காரில் ஏறி திருச்செந்துார் புறப்பட்டு சென்றார். இது குறித்த தகவலறிந்ததும், பா.ஜ.,வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மன்சுக் மாண்டவியா தான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே, கட்சி நிர்வாகிகளிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இழுபறி
ரங்கசாமியின் இந்த செயலால், தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரம், பா.ஜ., மேலிட பொறுப்பாளரை சந்திக்க மறுத்து, ரங்கசாமி திருச்செந்துார் சென்றது, ‘கூட்டணியை தொடர விருப்பமில்லை’ என சூசகமாக அவர் தெரிவித்திருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
இதற்கிடையில், திருச்செந்துார் சென்ற ரங்கசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதையடுத்து, தன் கட்சியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஆறுமுகம், ஜெயபால் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய ரங்கசாமி, ‘கூட்டணி தொடர்பாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவிடம் மீண்டும் பேச்சு நடத்துங்கள்’ என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அவர்கள், மன்சுக் மாண்டவியாவிடம் பேச்சு நடத்தி உள்ளனர். இதனால், கூட்டணியை தொடர்வதில் பா.ஜ., – என்.ஆர்.காங்., இடையே நிலவி வந்த பிரச்னை சுமுகமாக தீர்க்கப்படும் என, இரு கட்சி தலைவர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
