புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த நா.த.க., தேர்தல் பிரசாரத்தில், ‘டி.வி.கே.,’ கோஷமிட்ட இளைஞரை, சீமான் அலறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும், நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் நான்கு முனை சந்திப்பில் வேனில் இருந்தபடி அவர் பிரசாரம் செய்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபர், ‘டி.வி.கே., டி.வி.கே.,’ என கூச்சலிட்டார்.
கடுப்பாகி பேச்சை நிறுத்திய சீமான், அந்த இளைஞரை பார்த்து ஆவேசமாக, ‘ஏன் இங்கு வந்து டீ விக்கிற. அங்குட்டு போய் ‘டீ’ வில்லு. போடா டேய்…போடா.. என்னது டி.வி.கே.,வா டேய், அவன இங்க கூட்டிக்கிட்டு வாடா… டேய் இங்க வந்து டீ வித்துட்டு போடா’ என்றார்.
உடன் அங்கிருந்த நா.த.க.,வினர் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார், அந்த இளைஞரை சூழ்ந்தபடி அவரை வெளியேற்ற முயன்றனர். இருப்பினும், நா.த.க.,வினர் போலீசாரை மீறி இளைஞரை தாக்கினர்.
அதனைக் கண்ட சீமான், தங்கள் தொண்டர்களை பார்த்து, ‘நீங்கள் வாங்க. நீங்க அறிவார்ந்த பிள்ளைகள். அது வெறும் தற்குறி. நீங்க கோமாளி பிள்ளைகள் அல்ல. போராளியின் பிள்ளைகள். தம்பி நீங்கள் லட்சியவாதிகள். அவர்கள் ரசிகர்கள்.
நீ அங்கேயே டீ வில்லுப்பா’ எனக் கூறினார். அதற்குள் போலீசார், ஒருவழியாக அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
