புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில், பெண்ணிடம் நகை பறித்த 2 பெண்களை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம், முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சித்ரா, 55; சீர்காழி, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக உள்ளார். சீர்காழியில் வசித்து வரும் சித்ரா, சென்னைக்கு செல்ல நேற்று முன்தினம் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் வந்தார்.
அங்கு, பொது கழிப்பிடத்திற்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 பெண்கள், கழிவறையின் உள்ளே சித்ராவை அடைத்து, அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள், கடலுார் தனியார் பஸ்சில் ஏறி செல்வது தெரியவந்தது. இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் அந்த தனியார் பஸ்சை ஸ்டேஷன் எதிரே நிறுத்தி நகைகளை திருடி சென்ற 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலுார், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இளையராஜா மகள் நித்யா, 21; துாத்துக்குடி மாவட்டம், நாசரேத்தை சேர்ந்த பேச்சிமுத்து மகள் அபி (எ) அபிநயா, 21; என்பதும் தெரியவந்தது. இருவரும் சென்னையில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்து வருவதும், மாசி மகத்திற்காக நித்யா வீட்டிற்கு இருவரும் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சித்ரா புகாரின் பேரில், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் இரண்டு பெண்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான 7 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செயின் பறிப்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை, எஸ்.பி., சுருதி பாராட்டினார்.
