புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையில்,

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையில், புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை மீண்டும் தள்ளிப்போகிறது.

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதனையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் தற்போதுள்ள என்.ஆர்.காங்., – பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி வரும் தேர்தலிலும் தொடர்வது உறுதியாகி உள்ளது. அதனையொட்டி, ஆளும் கூட்டணி சார்பில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பிரதமரை கொண்டு மிகப் பெரிய அளவில் அரசு விழா நடத்தி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு மெகா திட்டங்களை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வரும் 12ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவதாக கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. மறுநாள் 3ம் தேதி சபாநாயகர் செல்வம் பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடி வரும் 16ம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளதாக கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை வரும் 21ம் தேதிக்கு தள்ளிப்போவதாக பா.ஜ.,வினர் கூறினர்.

அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலுக்கு வருவதாகவும், அங்கு பா.ஜ., சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதாக பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘புதுச்சேரியில் கூட்டணி உறுதியான போதிலும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், பிரதமர் வருகையின் போது துவக்கி வைக்க வேண்டிய திட்டங்கள், அறிவிக்க வேண்டிய மெகா திட்டங்கள் தேர்வு செய்யும் பணியிலும் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த குழப்பங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது பேசி தீர்க்கப்படும். அதன் பிறகே பிரதமர் புதுச்சேரிக்கு வருகை உறுதியாகும் என்கின்றனர்.

Source link