புதுடில்லி:“எதிர்காலத்தில் இந்தியா ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அங்குள்ள கொல்கட்டாவில் தாக்குதல் நடத்தப்படும்,” என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
கடந்தாண்டு ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், நம் விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை வேட்டையாடியது.
இதில், அங்கு செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘தேவையின்றி பாகிஸ்தான் அத்துமீறினால், முன்னெப்போதும் இல்லாத பதிலடி தரப்படும்’ என, எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் குவாஜா ஆசிப் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டு உளவாளிகள் அல்லது பாகிஸ்தானியர்களை வைத்தே இந்தத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் தாக்குதல் நடத்தி, அப்பழியை பாகிஸ்தான் மீது போடவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அப்படி ஏதாவது நடந்தால், நாங்கள் அங்கு மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கட்டாவை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம். இது, தீர்க்கமாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
