புதுடில்லி:கடந்த மாதம் நடந்த ஹோலி பண்டிகையின் போது, முஸ்லிம்களால், ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்தும், ஹனுமான் ஜெயந்தி விழாவை முன்னிட்டும், ஹிந்து அமைப்புகள் நேற்று நடத்திய ஊர்வலத்தின் போது, வன்முறை நடக்காமல் தடுக்க, உத்தம்நகர் மற்றும் ஜஹாங்கிர்புரி பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த மாதம், 4ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டில்லியிலும் அந்த பண்டிகை விமரிசையாக நடந்தது. அப்போது, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெருவாரியாக வாழும் தெற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள உத்தம்நகரில் வன்முறை வெடித்தது.
ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஒரு குடும்பத்தின் சிறுமி பறக்க விட்ட, வண்ண நீர் பலுான் பக்கத்து வீட்டில் விழுந்து, வெடித்து சிதறியதில், முஸ்லிம் பெண் ஒருவர் முழுவதும் வண்ண நீரால் நனைந்து விட்டார்.
அதையடுத்து, எழுந்த வன்முறையின் ஒரு கட்டமாக, 26 வயது ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டார். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை, பெண்கள், ஆண்கள் என, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹனுமான் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டும், ஹோலி பண்டிகையை அமைதியான முறையில் நடத்த வலியுறுத்தியும், ஹிந்து அமைப்புகள் சில, ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தன.
அந்த ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், உத்தம்நகரில் பிரச்னை ஏற்படலாம் என கருதி, அந்த பகுதி மற்றும் ஜஹாங்கிர்புரி பகுதிகளில், உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல இடங்களில் வாகன ஆய்வு நடத்தப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த பகுதியில் தீவிர போலீஸ் கண்காணிப்பு பணிகளும் செய்யப்பட்டன. இதனால், எந்த பகுதியில் நேற்று மாலை வரை, எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை.
தொடர்ந்து, அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.
