புதுடில்லி:டில்லி சட்டசபை வளாகத்தில் தன் சொகுசு காரில் சென்று, கேட்டில் மோதி, உள்ளே நுழைந்து, சபாநாயகர்

புதுடில்லி:டில்லி சட்டசபை வளாகத்தில் தன் சொகுசு காரில் சென்று, கேட்டில் மோதி, உள்ளே நுழைந்து, சபாநாயகர் விஜேந்தர் கார் முன் மலர் வளையம் வைத்து, வந்த வழியே காரில் திரும்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 – 21ம் ஆண்டில், மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை டில்லியில் முன்னின்று நடத்தியவர் சரப்ஜித் சிங், 37, என்ற நபர். உத்தர பிரதேசத்தின் பிலிபித் நகரை சேர்ந்த அவர், லேசாக மனக் கோளாறு உள்ளவர் என உறவினர்கள் கூறுகின்றனர்.

சரப்ஜித் சிங் கடந்த திங்கள் கிழமை, சமீபத்தில் வாங்கியிருந்த தன் சொகுசு காரில், இருவரை ஏற்றிக் கொண்டு, டில்லி சட்டசபை வளாகம் சென்றார். அங்கிருந்த கேட் எண்: 2 வழியாக வேகமாக காரில் சென்ற அவர், காரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மலர் வளையம் ஒன்றை எடுத்துச் சென்று, சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் கார் மீது வைத்து விட்டு, வேகமாக ஓடிச் சென்று தன் காரில் அமர்ந்தார்.

பின், வந்த வழியே அங்கிருந்து தப்பிய அவரையும், அவருடன் இருந்த இருவரையும், ரூப் நகர் போலீசார் சிறை பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதில் கூறப்படுவதாவது:

அவர் ஓட்டிச் சென்ற அந்த சொகுசு காரை, சமீபத்தில் தான் விலைக்கு வாங்கியிருந்தார். ஆளில்லாத சாலைகளில், மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் ஓட்டிச் செல்வது அவருக்கு வழக்கமான ஒன்று.

கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து சென்ற அவர், 6ம் தேதி சட்டசபையில் காரை மோத விட்ட பிறகு தான், அவர் டில்லியில் இருக்கிறார் என்பது வீட்டுக்கு தெரிந்தது.

அவரை காணாமல் வீட்டில் உள்ளவர்கள் தவித்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற போலீசார், அவர் குறித்து விசாரித்த போது தான், டில்லியில், சட்டசபை வளாகத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, கேட் எண்: 2ஐ நொறுக்கி, சபாநாயகர் கார் மீது மலர் வளையம் வைத்தவர் என்பது தெரிந்தது.

அவரின் வீட்டினரிடம் விசாரித்த போது, லேசாக மனநிலை கோளாறு உள்ளவர் என்பது தெரிந்தது. அதையடுத்து, அவர் மீதும், அவருடன் வந்த இருவர் மீதும், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Source link