புதுடில்லி:''நடப்பு நிதியாண்டில், டில்லி மாநிலத்தில், 70 லட்சம் புதிய மரக்கன்றுகளை நட அரசு இலக்கு

புதுடில்லி:”நடப்பு நிதியாண்டில், டில்லி மாநிலத்தில், 70 லட்சம் புதிய மரக்கன்றுகளை நட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,” என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

டில்லி மாநிலத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னையை தீர்க்க, மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, பசுமை பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், பல துறைகளையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், 70க்கும் மேற்பட்ட துாதர்கள், வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த வகையில், நடப்பு நிதியாண்டில், 70 லட்சம் புதிய மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், செடி, கொடிகள், புற்றுத்தாவரங்கள், மூங்கில் போன்றவையும் அடக்கம்.

இதில், மாநில வனத்துறை சார்பில், 27 லட்சம் மரக்கன்றுகளும், டி.டி.ஏ., எனும் டில்லி வளர்ச்சி ஆணையம் சார்பில், 10 லட்சம் மரக்கன்றுகளும், டில்லி மாநகராட்சி சார்பில் 3 லட்சம் மரங்களும், புதுடில்லி மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகளை, பல்துறை வளாகங்களில் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொதுப்பணித்துறை அலுவலகம், 3 லட்சம்; பள்ளிக்கல்வித்துறை 3.5 லட்சம்; உயர் கல்வித்துறை, 25 ஆயிரம்; தொழில்நுட்ப கல்வித்துறை, 41 ஆயிரம் என மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பல்துறை வல்லுனர்களிடம் பேசி, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் படி, பணிகள் துவங்கி, இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டில்லி மாநிலத்தின் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிர்சா கூறினார்.

Source link