புதுடில்லி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை

புதுடில்லி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய காங்., மூத்த தலைவர் பவன் கெரா வீட்டில், அம்மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 126 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பா.ஜ., – காங்., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

சமீபத்தில், காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பவன் கெரா கூறுகையில், ‘அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஆண்டிகுவா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார். துபாய் உட்பட பல்வேறு இடங்களில் அவருக்கு சொத்துகள் உள்ளன. இது சட்ட விரோதமானது’ என்றார். மேலும் இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும், அவரது மனைவி ரிங்கி புயானும் திட்டவட்டமாக மறுத்தனர். இது குறித்து, ரிங்கி புயான் அளித்த புகாரின்படி, குவஹாத்தி போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், தலைநகர் டில்லியில், நிஜாமுதீன் பகுதியில் உள்ள பவன் கெரா வீட்டில், டில்லி போலீசாருடன் இணைந்து, துணை கமிஷனர் தேபோஜித் நாத் தலைமையிலான அசாம் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இது குறித்து, துணை கமிஷனர் தேபோஜித் நாத் கூறியதாவது:

சோதனையின் போது பவன் கெரா வீட்டில் இல்லை. வீட்டில் இருந்து, ‘லேப்டாப், மொபைல் போன்’ உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளன. வழக்கின் முக்கியத்துவம் கருதி அதன் விபரங்களை தற்போது வெளியிட முடியாது. பவன் கெரா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. விரைவில் அவர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தப்பி ஓடி விட்டார்! கைதுக்கு பயந்து ஹைதராபாதுக்கு பவன் கெரா தப்பிச் சென்று விட்டார். அவர் எங்கிருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

பழிவாங்கும் நடவடிக்கை! கேள்வி கேட்டதற்காக ஒரு போலீஸ் படையையே அனுப்புவது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அசாம் போலீஸ் முதல்வரின் தனியார் படை போல செயல்படுகிறது. ஜெய்ராம் ரமேஷ் ராஜ்யசபா எம்.பி., – காங்கிரஸ்

Source link