புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்று மத்திய அரசு திட்டவட்டமாக

புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்த பிறகே, இந்தியா மீதான வரியை குறைக்க டிரம்ப் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 50 சதவீதமாக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இந்த வரிவிதிப்பால், ரஷ்யாவுடனான வர்த்தக உறவை இந்தியா துண்டித்து விடும் என்று அதிபர் டிரம்ப் நினைத்தார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டலை கண்டுகொள்ளாமல், ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெயை கொள்முதல் செய்தது. அதுமட்டுமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இந்தியா செய்து முடித்தது. மேலும், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது அமெரிக்காவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முழுவதுமாக நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கர்களுக்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாக அதிபர் டிரம்ப் சித்தரித்து வரும் நிலையில், அதற்கு மாறான தகவலை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, 2025ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பணிய மறுத்து, அதிபர் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவித்துள்ளது.

இந்தியா மீது கூடுதல் வரி விதித்த பிறகு, கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்து ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பயந்து அவசரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதை விட, டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க இந்தியா தயாராக இருப்பதாக மார்கோ ரூபியோவிடம் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாக ப்ளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை உணர்த்தும் விதமாகவே, வரியை குறைத்து அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி விடுத்த எக்ஸ் பதிவு அமைந்துள்ளது. அதில், வரிகுறைப்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்திருந்த பிரதமர் மோடி, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல, ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைப்பது பற்றியோ, அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு என்பது குறித்தோ ஏதும் அவர் பதிவிடவில்லை.

கடந்த காலத்தில் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட பல அமெரிக்க அதிபர்களை இந்தியா பார்த்து விட்டது. எனவே டிரம்பின் வரி அச்சுறுத்தல்களை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, அடிபணியவும் செய்யாது என்று தோவல் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Source link