புதுடில்லி:
அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவர் என ராகுல் குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் இந்திய பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறையினர் பாதிக்கப்படுவர். வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட 0 சதவீத வரி சலுகை இந்தியாவுக்கு மறுக்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும்.
ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி சாகுபடி இந்தியாவின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாக இருந்திருந்தால் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலன்களையும் பாதுகாக்கும். அவர்களின் வாழ்வில் செழிப்பை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கும்” என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல் வழக்கம் போல், உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார். நமது போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவுடன் இந்தியா மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. நமது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்.
அதே வேளையில் தொழில்துறை வளர்ச்சியை இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும். இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன் உள்ளிட்டவையுடன் வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைஉருவாக்கும். இவ்வாறு கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
