புதுடில்லி: 'அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம்

புதுடில்லி: ‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது’ என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இது குறித்தும், மத்திய பட்ஜெட் குறித்தும், காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

வர்த்தக ஒப்பந்தம் குறித்த ராகுலின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுஹான், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் தொடர்ந்து விளக்க மளித்து வருகின்றனர்.

இருப்பினும், அது தொடர்பாக ராகுல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் ஏமாற்றப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தன் சமூக வலைதள பதிவில், பிரதமரிடம் ராகுல் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

 டி.டி.ஜி., எனப்படும் உலர்ந்த வடிகட்டி தானியங்களை இறக்குமதி செய்வதன் அர்த்தம் என்ன? இந்திய கால்நடைகளுக்கு மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வடிகட்டி தானியங்கள் உணவாக கொடுக்கப்படும் என்பது அர்த்தமா? இது, நம் பால் பொருட்களை அமெரிக்க விவசாய தொழிலை சார்ந்து இருக்க செய்யாதா?

 மரபணு மாற்றப்பட்ட சோயா எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தால், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் நாடு முழுதும் உள்ள சோயா விவசாயிகள் நிலை என்னவாகும்? மற்றொரு விலை அதிர்ச்சியை அவர்கள் எப்படி தாங்குவர்?

 காலப்போக்கில் பருப்பு வகைகள் மற்றும் பிற பயிர்களை அமெரிக்க இறக்குமதிக்கு திறக்க வேண்டிய அழுத்தத்தை இது ஏற்படுத்துகிறதா?

 அதேபோல், வர்த்தகம் அல்லாத தடைகளை நீக்குவது என்றால் என்ன?

 எதிர்காலத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மீதான தன் நிலைப்பாட்டை தளர்த்தவோ, கொள்முதலை பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ இந்தியா அழுத்தம் தருமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link