புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வர ஆர்வமாக இருப்பதாக, அந்நாட்டின் துாதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
பல கட்ட பேச்சுக்கு பின், அமெரிக்கா – இந்தியா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதனால், இந்தியாவுக்கான வரி, 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புத்துயி ர் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் நேற்று அளித்த பேட்டி:
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். அவருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. சரியான நேரத்தில் இந்த பயணம் நடக்கும்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் விரைவில் இந்தியா வர உள்ளார்.
இந்த பயணம், ‘குவாட்’ எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பு தொடர்புடையது. மார்கோவின் பயணம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
