புதுடில்லி: “அரசுப் பள்ளிகளில், 20ம் தேதி-க்குள் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்,”என, கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறினார்.
டில்லி அரசின் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லி அரசுப் பள்ளிகளில், 20-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பாடப்புத்தகங்கள் அச்சிட டெண்டர் நடைமுறை காரணமாகவே, புத்தகம் வினியோகம் செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனல், டெண்டர் நடைமுறையால் கல்வி இயக்குனரகத்துக்கு 20 முதல் 30 சதவீதம் வரை செலவு குறைகிறது.
பாடப்புத்தகங்கள் மேம்பட்ட தரத்தில் அச்சிடப்படுகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து பள்ளிகளிலும், 20-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்கள் வழங்கி விடுவோம்.
பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் சீருடைகளை குறிப்பிட்ட விற்பனையாளரிடம் மட்டுமே வாங்கும்படி அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. பொருட்களை எங்கு வாங்குவது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களின் பெற்றோருக்கு உள்ளது.
குறிப்பிட்ட கடைகளிலிருந்து மட்டுமே கல்விப் பொருட்களை வாங்கும்படி சில தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகவும், அந்தக் கடைகளில் அதிக விலைக்கு பாடப்புத்தகங்கள் விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அதிகாரப்பூர்வ பாடத்திட்டம் மற்றும் தேர்வு வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மற்றும் மாநிலக் கல்வித் துறை வெளியிடும் வழிகாட்டுதல்களை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விப் பொருட்களின் விரிவான பட்டியலை பள்ளிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் பாடப்புத்தங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அசோக் அகர்வால், முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.
