புதுடில்லி: ஆம் ஆத்மியின் ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சி எம்.பி., ராகவ் சத்தா,

புதுடில்லி: ஆம் ஆத்மியின் ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சி எம்.பி., ராகவ் சத்தா, ‘என் மவுனத்தை தோல்வியாக கருத வேண்டாம்’ என, பதிலளித்த நிலையில், “பார்லிமென்டில் மோடிக்கு எதிராக பேச பயந்தது ஏன்?” என, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அனுராக் தாண்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில ராஜ்ய சபா எம்.பி.,யாக இருப்பவர் ராகவ் சத்தா, 37. 2012ல் கட்சி துவங்கியது முதலே, அதில் அவர் அங்கம் வகித்து வருகிறார்.

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட ராகவ், கட்சி நடவடிக்கைகளில் இருந்து சமீபகாலமாக விலகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதான போதும், பின் விடுதலையான போதும் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது, கட்சிக்குள் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டார்.

இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைமை, ராஜ்யசபா செயலகத்துக்கு அனுப்பியது. ‘அவரை பார்லி.,யில் பேச அனுமதிக்கக்கூடாது’ என, அதில் தெரிவிக்கப்பட்டது.

ராகவ் சத்தாவுக்கு பதிலாக, மற்றொரு எம்.பி.,யான அசோக் மிட்டல் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அனுராக் தாண்டா நேற்று கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் பேச நீங்கள் அச்சப்படுகிறீர்கள். பார்லிமென்டில் பேச நேரம் கிடைப்பதே மிகவும் அரிது.

அப்போது, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல், விமான நிலைய உணவகத்தில் குறைந்த விலையில் சமோசா விற்பது குறித்து பேசலாமா?

குஜராத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்கப்பட்டபோது, அந்த பிரச்னையை பார்லி.,யில் நீங்கள் எழுப்பவில்லை. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் இயற்றிய போது, அதில் கையெழுத்திட மறுத்தீர்கள்.

பிரதமர் மோடி பார்லி.,யில் பேசிய போது, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் நீங்களோ, வருகையை பதிவு செய்ய இருக்கையிலேயே அமர்ந்திருந்தீர்கள். இதுபோல், பல சமயங்களில் கட்சிக்கு எதிராகவே உங்கள் செயல்பாடு இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகவ் சத்தா மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல், ஆம் ஆத்மிக்குள் உட்கட்சி மோதல் நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

பதிலடி!

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, சமூக ஊடகத்தில் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள பதிவு:

எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், பார்லி.,யில் மக்கள் பிரச்னைகளை பேசியுள்ளேன். அப்படி பேசுவது குற்றமா? இல்லை, நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? எனக்கு பேச வாய்ப்பளிக்கக்கூடாது என, கட்சி தலைமை, ராஜ்யசபா செயலகத்திடம் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மிக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான், என் மவுனத்தை தோல்வியாக கருத வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link