புதுடில்லி: இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தை

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் முதலிடம் பிடித்துள்ளன.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் முதல்முறையாக, ஆட்டோமோட்டிவ் டீசல் எரிபொருளைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்மார்ட்போன்கள் முதன்மையான ஏற்றுமதி துறையாக உருவெடுத்துள்ளன.

கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.2.7 லட்சம் கோடி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 76 சதவீதம் பங்களிப்பை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே வழங்கியுள்ளது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஆட்டோமோட்டிவ் டீசல் ரூ.1.48 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, வைரங்கள், மருந்துகள் மற்றும் மோட்டார் பெட்ரோல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடந்த 2024ல் 1.85 லட்சம் கோடியாக இருந்த ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி, தற்போது 47 சதவீதம் அதிகரித்து, ரூ.2.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 1.04 லட்சம் கோடியாக இருந்த ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் ஏற்றுமதி இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, 2.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் டாடா குழுமம் போன்ற இந்திய நிறுவனங்களும் இணைந்தது போன்றவையே, ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Source link