புதுடில்லி: இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதன்பின், இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 18 சதவீதமாக குறைப்பதற்கான அரசாணையை அமெரிக்கா பிறப்பிக்கும் என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்கா உடனான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. அடுத்த 4 – 5 நாட்களில் இது தொடர்பான கூட்டறிக்கையை இறுதி செய்து, இரு தரப்பினரும் கையெழுத்திடுவோம். கூட்டறிக்கை கையெழுத்தான ஓரிரு நாட்களில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘எக்ஸிகியூட்டிவ் ஆர்டர்’ எனப்படும் அரசாணையொன்றை பிறப்பிப்பார்.
இதையடுத்து, இந்திய பொருட்களுக்கு இப்போது 50 சதவீதமாக இருக்கும் வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்கும்.
இதன்பின், சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை தயார் செய்ய, ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் ஆகலாம். வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சட்டப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்தியாவின் வளர்ச்சி வேகத்துக்கு ஏற்ப, எரிசக்தி, தரவு மைய உபகரணங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பொருட்கள் போன்றவற்றுக்கு பெரிய அளவில் தேவை ஏற்படும்.
அந்த தேவையை பூர்த்தி செய்ய, அமெரிக்காவிடமிருந்து அடுத்த சில ஆண்டுகளில் 45 லட்சம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே இவ்வளவு கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் ‘போயிங்’ நிறுவனத்தில் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டவை மற்றும் ஆர்டர் செய்ய தயாராக உள்ளவை சேர்த்து, கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய்க்கு விமான ஆர்டர்கள் உள்ளன. இன்ஜின்கள், உதிரி பாகங்கள் சேர்த்தால் மொத்த கொள்முதல் ஒன்பது லட்சம் கோடி ரூபாயை எட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
