புதுடில்லி: இந்தியா – மியான்மர் எல்லை பகுதியில் பயங்கரவாதிகளுக்கு போர் பயிற்சி வழங்கியதாக ஆறு உக்ரைனியர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் என, 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், வங்கதேசம், மிசோரம், மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகளை இணைத்து கிறிஸ்துவ நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டவர்கள் சிலர் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரம் வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்கு அடிக்கடி சென்று வருவது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ., கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடந்த 13ம் தேதி இரவு டில்லி, உத்தர பிரதேசத்தின் லக்னோ, மேற்கு வங்கத்தின் கொல்கட்டா விமான நிலையங்களில் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்கள் ஏழு பேர் பிடிபட்டனர்.
அவர்களில் ஆறு பேர் உக்ரைனியர்கள். ஒருவர் அமெரிக்கர். என்.ஐ.ஏ.,வின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இவர்கள் சிக்கினர். விசாரணையில் மியான்மரில் பல்வேறு ஆயுத குழுக்களுக்கு பயிற்சி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றுலா விசா
இதையடுத்து தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அவர்கள் ஏழு பேரும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையில் என்.ஐ.ஏ., தரப்பு கூறியுள்ளதாவது:
சுற்றுலா விசாவில் இந்தியா வந்த ஆறு உக்ரைனியர்களும், ஒரு அமெரிக்கரும் வடகிழக்கு மாநிலமான மிசோரம் வழியாக மியான்மருக்குள் சட்டவிரோதமாக சென்று உள்ளனர்.
அங்குள்ள இன ஆயுத குழுக்களுக்கு, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் இயக்கம் மற்றும் சிக்னல் தடுப்பு உள்ளிட்ட சிறப்பு ஆயுத பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், ஐரோப்பாவில் இருந்து பெரிய அளவில் ட்ரோன்களை கொண்டு வந்து, இந்தியா வழியாக அந்த குழுக்களுக்கு வழங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள ஆயுத குழுக்கள், வடகிழக்கு மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள், நம் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
11 நாள் காவல்
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் டில்லி சிறப்பு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 11 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து மேலும் சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து அரசியல் நிபுணர்கள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாட்டவர்கள் கைது சம்பவம், 2024ல் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட ஒரு எச்சரிக்கை செய்தியை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளது.
வங்கதேசத்தின் சட்டோகிராம், மியான்மர் மற்றும் நம் நாட்டின் மிசோரம் ஆகியவற்றின் சில பகுதிகளை இணைத்து, வங்க கடல் அருகே ராணுவ தளத்துடன் கிறிஸ்துவ நாடு உருவாக்கும் சதி குறித்து முன்பு அவர் கூறியிருந்தார்.
இதன் பின்னணியில் வெள்ளையர் ஒருவர் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது கைதானவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்தியூ ஆரோன் வான்டைக் அவர் கூறிய நபராக இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
இவர் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் போரில் அமெரிக்க ராணுவம் சார்பில் களத்தில் பணியாற்றியவர். ‘சன்ஸ் ஆப் லிபர்டி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பை நிறுவி ஆயுத பயிற்சிகளை வழங்கி வந்தவர். இருப்பினும் என்.ஐ.ஏ., இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
