புதுடில்லி: இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற இரு எரிவாயு கப்பல்கள், மேற்கு ஆசியாவின் பதற்றமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை கடந்தன.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான் அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்குகின்றன. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. அவ்வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் இது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்தது. சமையல் எரிவாயு வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை தொடர்பு கொண்டு பேசினார். பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் பேசி, இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன.ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி கப்பல்களில் தலா 40,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிவாயு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும், 22 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்திருக்கின்றன. அவற்றை பாதுகாப்பாக விடுவிக்கும் பணியை உறுதி செய்ய மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
