புதுடில்லி: ஈரானுக்கு முதற்கட்டமாக மருத்துவ நிவாரண பொருட்களை இந்தியா வழங்கி உள்ளது.
இந்த பொருட்கள் அந்நாட்டிற்கு வந்தடைந்தது. இதனை அங்குள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து நமது நாட்டில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது : மதிப்புமிக்க இந்திய மக்கள் முதற்கட்டமாக வழங்கிய மருத்துவ உதவி பொருட்கள் ஈரானை வந்தடைந்தது. இதற்காக அன்பான இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 28 ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப்படைகள் கூட்டாக தாக்குதல்நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சுகாதார கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதும், மருத்துவ பணியாளர்கள் காயம் அடைந்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.
