புதுடில்லி: ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி

புதுடில்லி: ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் போரில் அழுத்தத்தை உருவாக்கும் விதமாக, உலகளாவிய தேவையில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், இந்திய கப்பல்கள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் காஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் ஒருநாள் மூடப்பட்டன. மேலும், விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு ஹோட்டல்கள் மாறின. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தேவையான கையிருப்பு இருப்பதால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், போர் தீவிரமடைந்த நிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல்களை தாக்குவோம் என்று ஈரான் கூறியிருந்தது. இப்படிபட்ட சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பேரில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் அடிப்படையில் இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், புஷ்பாக் மற்றும் பரிமால் ஆகிய இரு இந்திய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சவுதி அரேபியாவில் இருந்து, இந்தியரை கேப்டனாகக் கொண்ட லைபீரியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் தடையின்றி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Source link