புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் ஹிந்துக்களின் மிக முக்கிய புனித தலமான காசி, அயோத்தி ராமர் கோவில் மற்றும்

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் ஹிந்துக்களின் மிக முக்கிய புனித தலமான காசி, அயோத்தி ராமர் கோவில் மற்றும் டில்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களில், வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சதித்திட்டம்

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் ராணுவ நிலைகள் மீதும் அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழி வாங்கும் வகையில் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாக்., ராணுவமும், பயங்கரவாதிகளும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நவ., 10ல், டில்லி செங்கோட்டை பகுதியில், காரில் வெடிகுண்டுகளை நிரப்பி எடுத்து வந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்காக, ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் மருத்துவக் கல்லுாரியில் பயின்ற டாக்டர்கள் சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

கடந்த 6ல், பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதற்கு நம் நாடு தான் காரணம் என, அந்நாடு பழி சுமத்தி வருகிறது. இதற்கு பழி வாங்கும் வகையில், ஜெய்ஷ் – இ – முகமது மற்றும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில், இரு பயங்கரவாத அமைப்பினரும் ஒன்று கூடி, இதற்காக சதித் திட்டம் தீட்டியதாகவும், ‘ஜும் கா பத்லா’ என்ற பெயரில் டில்லி மற்றும் உ.பி.,யில் உள்ள முக்கிய ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, உ.பி.,யில் உள்ள ஹிந்துக்களின் மிக முக்கிய புனித தலமான காசி, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மற்றும் டில்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.இதையடுத்து, டில்லி மற்றும் உ.பி.,யில் உள்ள முக்கிய ஹிந்து கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. டில்லியில் உள்ள இஸ்கான், அக்ஷர்தாம், லோட்டஸ் கோவில் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல்

சந்தேகத்துக்கு இடமான பொருட்களை கண்டாலோ, நபர்களை பார்த்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தரும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பெரும்பாலும் நேபாளம், வங்கதேசம் வழியாக நம் நாட்டிற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அந்நாடுகளை ஒட்டிய எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்கொலைப் படை தாக்குதலுக்காக பஞ்சாப் எல்லை வழியாக வெடிப்பொருட்களை கடத்தி வரக்கூடும் என்பதால், அங்கும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஹோலி மற்றும் ஸ்ரீராம நவமி பண்டிகை வரவிருப்பதால், அதை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், டில்லி மற்றும் உ.பி., போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப், காஷ்மீரில் வெடிகுண்டு பறிமுதல்

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ராயா போலீஸ் சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பை இருந்தது. சோதனை செய்ததில், ஐ.இ.டி., வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அதே நாளில், ஜம்மு – காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபாப்போரா பகுதியிலும், ஐ.இ.டி., வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதை, போலீசார் செயலிழக்கச் செய்தனர். பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ள நிலையில், இந்த வெடிகுண்டுகள் கண் டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link