புதுடில்லி: கேரள சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் பிரசார குழுவின் இணைத் தலைவராக லோக்சபா எம்.பி., சசி தரூர்

புதுடில்லி: கேரள சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் பிரசார குழுவின் இணைத் தலைவராக லோக்சபா எம்.பி., சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காங்., தலைமையுடன் சமரசம் ஏற்பட்ட நிலையில், இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி பங்கீடு

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதேபோல் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டவையும் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்., மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், மாநில தேர்தல் பிரசாரக்குழு விபரங்களை அக்கட்சி தலைமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில், மாநில தேர்தல் பிரசார குழு தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிருப்தி

அக்குழுவின் இணைத் தலைவராக லோக்சபா எம்.பி., சசி தரூருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.இது, கேரள காங்கிரசில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.முன்னதாக, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்ததுடன் காங்., தலைமையின் முக்கிய கூட்டங்களையும் சசி தரூர் புறக்கணித்து வந்தார்.

இதனால், அவர் மீது காங்., தலைமை அதிருப்தியில் இருந்தது.சமீபத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை சசி தரூர் சந்தித்து பேசினார்.இச்சந்திப்புக்குப் பின், கேரள காங்கிரசுடனும் இணக்கமான போக்கை சசி தரூர் கடைப்பிடித்து வருகிறார்.

இதனால், மாநில தேர்தல் பிரசார குழுவின் இணைத்தலைவராக சசி தரூரை, அக்கட்சி தலைமை நியமித்துள்ளது. இதன்மூலம், கட்சியில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிப்பதை காங்., தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

Source link