புதுடில்லி: கோடைகால மற்றும் பருவமழை காலத்துக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கவர்னர் மற்றும் முதல்வர் யமுனை நதிக்கரையில் ஆய்வு செய்தனர்.
தலைநகர் டில்லியில் கோடைகாலம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடைகாலம் நெருங்குவதை முன்னிட்டு, மாநகர் முழுதும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சந்து மற்றும் முதல்வர் ரேகா குப்தா ஆகியோர், யமுனை நதிக்கரையில் நேற்று ஆய்வு செய்தனர்.
சவால் வாசுதேவ் படித்துறையில் ஆய்வு செய்த பின், கவர்னர் தரஞ்சித் சிங் கூறியதாவது:
முன்னெச்சரிக்கை பணிகளில் அனைத்து அமைச்சர்களை ஈடுபடுத்த முதல்வர் ரேகாவுடன் ஆலோசனை நடத்தினேன். கோடை காலம் விரைவில் துவங்க இருப்பதால், தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்வது மிகப்பெரிய சவாலான பணி. மேலும், கோடைகாலத்தை தொடர்ந்து, பருவமழை துவங்கி விடும்.
அப்போது, டில்லி மாநகரில் வெள்ளம் தேங்காமல் வடிகால்வாய்களை இப்போதே துார்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும். அதேபோல, துாய்மைப் பணிகளை தொய்வின்றி செய்யவும் பல இடையூறுகள் ஏற்படும் .
எனவே, அமைச்சரைவையுடன் விரிவான ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை திட்டங்களை செயல்படுத்த, முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
பல்லா முதல் காலிண்டி கஞ்ச் வரை யமுனையின் வெள்ளப்பெருக்குப் பகுதிகள் மேம்படுத்தப்படும்.
வாசுதேவ் படித்துறை மட்டுமின்றி, அசிதா, பான்சேரா மற்றும் யமுனை பல்லுயிர் பூங்கா போன்ற புதுப்பிக்கப்பட்ட படித்துறைகள் பசுமையான பொது இடங்களாக உருவெடுத்துள்ளன. இவை டில்லி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அரசின் மற்ற துறைகள் ஒத்துழைப்புடன், டில்லி மேம்பாட்டு ஆணையம் இதர படித்துறைகளையும் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் டில்லி அரசு இணைந்து மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
ஒருங்கிணைப்பு நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, டில்லி ஜல் போர்டு, டில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் டில்லி மாநகராட்சி உட்பட தொடர்புடைய அனைத்துத் துறைகளும் இணைந்து, முழுமையான ஒருங்கிணைப்புடன் டில்லி மாநகர மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும்.
டில்லி எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும். யமுனை நதி மாசு, காற்று மாசு, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லாமல் முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும். நதியின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்க, வெள்ளச் சமவெளிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
