புதுடில்லி: சந்தையில் புதிதாக விற்பனைக்கு வரும், 'மொபைல் போன்'களில், ஆதார் செயலியை கட்டாயமாக்கும்

புதுடில்லி: சந்தையில் புதிதாக விற்பனைக்கு வரும், ‘மொபைல் போன்’களில், ஆதார் செயலியை கட்டாயமாக்கும் திட்டத்தை யு.ஐ.டி.ஐ.ஏ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. இதற்கு, ‘சாம்சங், ஆப்பிள்’ ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பல்வேறு சேவை

நம் நாட்டு குடிமக்களுக்கான அடையாள ஆவணமாக ஆதார் உள்ளது. தற்போது, 134 கோடி மக்களிடம் ஆதார் உள்ளது. வங்கி, தொலைத்தொடர்பு, விமான பயண சேவை, அரசு நலத் திட்டங்கள் உட்பட பல்வேறு சேவைகளை பெற ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரியில், ‘மொபைல் போன்’ வாயிலாக பயன்படுத்தப்படும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப் பட்டது. முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருத்துதல், குடும்ப விபரங்களை நிர்வகித்தல் போன்ற வசதிகள் இதில் வழங்கப்படுகின்றன.

‘மொபைல் போன்’ தயாரிப்பு நிலையிலேயே, இந்த செயலியை அதில் பதிவிறக்கி வழங்கினால், அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, யு.ஐ.டி.ஐ.ஏ., கருதுகிறது. இந்த யோசனையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு முன்மொழிந்துள்ளனர்.

எதிர்ப்பு

ஆனால், இந்த யோசனைக்கு மொபைல் போன் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப உற்பத்தி யாளர்கள் சங்கமான எம்.ஏ.ஐ.டி., ‘இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய தயாரிப்புக்கு ஒரு அசெம்பிளி லைன், வெளிநாட்டுக்கு அனுப்பும் மொபைல் போன்களுக்கு ஒரு அசெம்பிளி லைன் என தனி தனியே உரு வாக்க வேண்டும். இது சிக்கலை ஏற்படுத்தும்’ என கூறி உள்ளனர்.

இதற்கு முன், ‘ஆன்லைன்’ முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிப்பது, தொலைந்த மொபைல் போனை கண்டறிவது உள்ளிட்ட வசதிகளை வழங்கும், ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியை, மொபைல் போன்களில் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தனியுரிமை பிரச்னையை முன் வைத்து எழுந்த எதிர்ப்பால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

Source link