புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பீதியில் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், காஸ் சிலிண்டர் விநியோகம் எங்களுக்கு ஒரு கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. இருப்பினும், இதுவரை நாடு முழுவதும் போதுமான இருப்பு உள்ளது. எங்கும் தட்டுப்பாடில்லை. ஆனால், தட்டுப்பாடு பீதியால் முன்பதிவுகள் மிக அதிகமாகின்றன. நேற்று சுமார் 75 முதல் 76 லட்சமாக இருந்த முன்பதிவுகளின் எண்ணிக்கை, தற்போது 88 லட்சமாக உயர்ந்துள்ளது.
தற்போது 84 சதவீதம் முன்பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன. இதை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியவில்லை என்று புகார்கள் வருகின்றன. தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பொதுமக்கள் யாரும் பதற்றமடைந்து காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டும் முன்பதிவு செய்யுங்கள்.
நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அடுத்த முன்பதிவு செய்ய 25 நாட்கள் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் இந்த இடைவெளி 45 நாட்களாக இருக்க வேண்டும். இந்த காலக்கெடு முடிவதற்கு முன்பாக முயற்சித்தால் முன்பதிவு செய்ய முடியாது.
வணிக ரீதியான சிலிண்டர்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கும் குறிப்பிட்ட அளவு எல்பிஜி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசுகளிடம் சிலிண்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சந்தை மற்றும் பதுக்கலைத் தடுக்க மாநில அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அடங்கிய கூட்டுக்குழுக்கள் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் திடீர் ஆய்வுகள் மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் சுமார் 1,400 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
