புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதை தாக்கல் செய்த வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

லூதியானா சென்று ஸ்வெட்டர் விற்கும் வேலையை பாருங்கள். இதே போன்று மீண்டும் செய்தால் கடுமையான அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் முதல் ஐகோர்ட் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் பொது நல வழக்குகளை தாக்கல் செய்கின்றன. பல வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. விளம்பர நோக்கங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களின் கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ரஜ்னிஸ் சித்து என்ற துணி வியாபாரி சுப்ரீம் கோர்ட்டிற்கு நேரடியாக வந்து பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். பி எம் கேர்ஸ் நிதியம் தொடர்பாக அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணை துவங்கியதும் ரஜ்னிஸ் சித்து எழுதி வைத்திருந்த வாதங்களை பார்த்து வாசிக்க துவங்கினார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், சித்துவின் பின்னணி மற்றும் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர், தான் கடந்த காலத்தில் எந்த மனுவை தாக்கல் செய்தது இல்லை எனவும், முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வந்து தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

இதற்கு ஆச்சர்யம் அடைந்த தலைமை நீதிபதி, லூதியானாவில் இருந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு நேரடியாக வந்து மனு தாக்கல் செய்த உங்களுக்கு அதிக தைரியம் தான் எனக்கூறியதுடன், உங்களின் ஆங்கில அறிவை பரிசோதிக்கப்போவதாக தெரிவித்தார்.

மேலும், இந்ததேர்வில் 30 சதவீத மதிப்பெண் எடுத்தால், இந்த மனுவை நீங்களே தயாரித்தீர்கள் என்பதை நம்புவோம் எனக்கூறியதுடன், மனுவில் கூறப்பட்டுள்ள “Fiduciary Risk of Corporate Donors”, என்ற வாக்கியத்துக்கு விளக்கம் அளிக்கும்படி கூறினார்.அப்போது ரஜ்னிஸ் சித்து குட்டு வெளிப்பட்டது. தலைமை நீதிபதியின் கேள்விக்கு ரஜ்னிஸ் சித்து, எழுதி வைத்து இருந்த குறிப்பை பார்த்து வாசிக்க துவங்கினார்.

அப்போது அவரை இடைமறித்த தலைமை நீதிபதி, ” இது யாரோ வழக்கறிஞர் ஒருவர் இதை எழுதி உங்களுக்கு கொடுத்துள்ளார். நீங்கள் அதில் இருப்பதை பார்த்து படிக்கின்றீர்கள்,” எனக்கூறியதுடன், இது குறித்து பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.

இதனால் பயந்து போன ரஜ்னிஸ் சித்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் டைப்பிஸ்ட் தான் உதவி செய்தார். அவருக்கு நான்கு ஆடைகளை பரிசளித்தேன். ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். ஆனால், அந்த மனுவை நான் பயன்படுத்தவில்லை. இதனை, நான் சொந்தமாக தயாரித்தேன்,” என விளக்கம் அளித்தார்.மேலும், வழக்கறிஞர் வைக்கும் அளவுக்கு வசதி இல்லாத காரணத்தினால் 3 அல்லது 4 ஏஐ மென்பொருள் உதவியுடன் இந்த மனுவை தயாரித்ததாக உண்மையை சொன்னார்.

இதனையடுத்து கோபம் அடைந்த நீதிபதிகள், ” லூதியானாவுக்கு சென்று 3 அல்லது 4 ஸ்வெட்டர் விற்று பிழைத்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால், சட்டரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கடுமையான அபராதம் விதிப்போம் என எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 5 பொது நல மனுக்களை தள்ளுபடி செய்தது. அதில், ஒரு மனுவில் , வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டில் எதிர்மறை சக்தி உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்த மனுவை நடுராத்திரியில் தயாரித்தீர்களா என் வழக்கு தொடர்ந்தவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link