புதுடில்லி: ‘டாடா’ குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் 2017 முதல் பொறுப்பில் உள்ளார். அதற்கு முன், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றியதுடன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.
இவர், நம் நாட்டின் பத்மபூஷண், பிரான்சின் ‘ லெஜியான் டி அனோர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு பிரிட்டன் அரசு கவுரவ நைட் பட்டம் அறிவித்தது. டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சந்திரசேகரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் சார்பில், இந்தியாவுக்கான பிரிட்டன் துாதர் லிண்டி கேமரூன் இந்த விருதை வழங்கினார். இந்தியா – பிரிட்டன் வர்த்தக உறவை வலுப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
