புதுடில்லி: “டில்லியில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு இல்லை,”என, சட்டசபையில் அமைச்சர் பதில்

புதுடில்லி: “டில்லியில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு இல்லை,”என, சட்டசபையில் அமைச்சர் பதில் அளித்தார்.

டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாம் அமர்வு நடந்து வருகிறது. கடந்த கூட்டத் தொடரில், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் நான்கு எம்.எல்.ஏ.,க்களை, பட்ஜெட் கூட்டத் தொடர் முழுதும் ‘சஸ்பெண்ட்’ செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாவிட்டால், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வை புறக்கணிப்பதாக, ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங் அறிவித்தார்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு, 23ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா, 2026 – 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று மூன்றாம் நாள் கூட்டம் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மதியா மஹால் தொகுதி எம்.எல்.ஏ., ஆலே முஹமது இக்பால் மட்டும் பங்கேற்றார். சட்டசபையில் பேசிய இக்பால், “டில்லி மாநகரில் காஸ் சிலிண்டர் பற்றாக்குறையை போக்கவும், கள்ள சந்தையில் காஸ் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுதவதை தடுக்கவும் அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?”என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, “டில்லியில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. இதுகுறித்த மக்களுக்கும் எந்த அச்சமும் ஏற்படவில்லை,”என்றார்.

Source link