புதுடில்லி: டில்லியில் நடந்த ஏ.ஐ., உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் இளைஞர் தலைவர் உதய் பானு சிப்புக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
த லைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த மாதம் 16 – 21 வரை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாட்டு கண்காட்சி அரங்குக்குள் நுழைந்த காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஒரு சிலர் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தினர். சர்வதேச அரங்கில் நம் நாட்டின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த டில்லி போலீசார், காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் எட்டு பேரை கைது செய்தனர்.
மேலும், போராட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட டில்லி காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதய் பானு சிப்பை போலீசார் கைது செய்தனர். நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட உதய் பானு, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மேலும் மூன்று நாட்களுக்கு அவரின் காவலை நீட்டிக்க போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, உதய் பானுவுக்கு ஜாமின் வழங்கினார்.
