புதுடில்லி, டில்லியில் நடந்த சாலை விபத்தில் நிரந்தரமாக செயலிழந்த நபருக்கு, 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, காப்பீடு வழங்கிய நிறுவனத்திற்கு, டில்லி மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் சுதீப் ராஜ் சைனி பிறப்பித்துள்ள உத்தரவில், பாரத் கய் என்ற நபருக்கு, 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
அதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், ‘சில மோசமான ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகளால் எதிர் தரப்பில் உள்ள பலர் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய பாதிப்பை பாரத் கய் என்ற இந்த இளைஞர் சந்தித்துள்ளார். இவரின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், முழுவதும் செயல்படாத நிலையை அவர் அடைந்துள்ளார். அவரை நம்பி வாழும் அவரது குடும்பத்தினருக்கு, 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறேன்’ என்றார்.
கடந்த, 2022ல் நடந்த வாகன விபத்தில் பாரத் கய், படுகாயம் அடைந்து, பல மாதங்களாக சிகிச்சையில் இருந்தும் தேறாததால், அவரின் நெருங்கிய உறவினர்கள், இந்த நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதை விசாரித்த நடுவர் நீதிமன்ற தலைவர் சுதீப் ராஜ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
