புதுடில்லி: டில்லி ஏ.ஐ., மாநாட்டில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான காங்., இளைஞரணி தொண்டர்களில் நான்கு

புதுடில்லி: டில்லி ஏ.ஐ., மாநாட்டில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான காங்., இளைஞரணி தொண்டர்களில் நான்கு பேரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

த லைநகர் டில்லியில் சர்வதேச ஏ.ஐ., தாக்க உச்சி மாநாடு கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. மாநாட்டையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், கண்காட்சி அரங்குக்குள் நுழைந்த 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள், தாங்கள் அணிந்திருந்த ‘டி-ஷர்ட்’களைக் கழற்றி, கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர், சட்டை அணியாமல் இருந்தனர்.

டி – ஷர்ட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. மேலும், ‘இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள், பிரதமர் சமரசம் செய்துவிட்டார்’ ஆகிய வாசகங்களும் இருந்தன. இதனால், போராட்டக் காரர்களுக்கும், அங்கிருந்த பார்வையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, போராட்டக்காரர்களை கைது செய்தனர்.அவர்களை டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ரவி, பீஹாரை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி தேசிய செயலர் கிருஷ்ண ஹரி, பீஹார் மாநில செயலர் குந்தன் யாதவ், உ.பி., மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் அஜய் குமார் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர் நரசிம்ம யாதவ் ஆகியோரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

ராகுலுக்கு கருப்பு கொடி இதற்கிடையே காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்களை கண்டித்து, டில்லி, சூரத், ஹைதராபாத் உட்பட நாடு முழுதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக, அவதுாறு வழக்கில் ஆஜராவதற்காக மஹாராஷ்டிராவின் தானே நோக்கி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முலுந்த் பகுதியில் அவரது வாகனத்தை வழிமறித்த பா.ஜ.,வினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘லஷ்கர் – இ – ராகுல்’ என அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link