புதுடில்லி: “டில்லி மாநகராட்சி கமிஷனரின் நிதி அதிகாரம், 5 கோடி ரூபாயில் இருந்து, 50 கோடி ரூபாயாக

புதுடில்லி: “டில்லி மாநகராட்சி கமிஷனரின் நிதி அதிகாரம், 5 கோடி ரூபாயில் இருந்து, 50 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க முடியும்,” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

வளர்ச்சிப் பணிகள் தாமதம் இல்லாமல் நடக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

டில்லி மாநகராட்சி கமிஷனர் தற்போது, 5 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க அதிகாரம் உள்ளது.

ஐந்து கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு மாநகராட்சி நிலைக்குழு மற்றும் மாநகராட்சி கவுன்சில் அனுமதி ஆகியவற்றை பெற வேண்டும். இந்த பல அடுக்கு ஒப்புதல் முறையால், அத்தியாவசியமாகவும் அவசரமாகவும் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, பொதுநலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி கமிஷனரின் நிதி அதிகாரம், 5 கோடி ரூபாயில் இருந்து, 50 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், வளர்ச்சித் திட்டங்களை தாமதமின்றி விரைந்து செயல்படுத்த முடியும். செயல்முறை எளிமையாகவும், வேகமாகவும் இருக்கும்.

இந்த அதிகாரப் பகிர்வால் டில்லி மாநகரில் சாலைகள், வடிகால்கள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கலாம்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்தவும், நடைமுறை சிக்கல்களை களையவும், வளர்ச்சித் திட்டங்கள் தேவையற்ற தாமதமின்றி மக்களைச் சென்றடையவும் இந்த அதிகார பகிர்வு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link