புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்தி சேனல் ஒன்று, அவசர கால கச்சா எண்ணெய் இருப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. அதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளித்துள்ள பதில்:
அவசர காலங்களில் எரிபொருள் வினியோகத்தை தடையின்றி தொடர்வதற்காக, 2004ல் பாதுகாப்பு கையிருப்பு திட்டம் துவங்கப்பட்டது. ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் இதற்கான சேமிப்பு நிலைய வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒடிஷா மாநிலம் சந்திகோல் மற்றும் கர்நாடகாவில் படூரில் கூடுதல் சேமிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு 2021ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. அவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்பட்டால், நாட்டின் அவசர கால கச்சா எண்ணெய் கையிருப்பு, 9.5 நாட்கள் தேவையை பூர்த்தி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
