புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை, கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை, கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும்’ என, மனுதாரரான அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தமிழகத்தில், கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ஸ்டாலினின் வெற்றி செல்லாது’ என அறிவிக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் சைதை துரைசாமி தரப்பு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மூன்று மாதத்திற்கு மேல் அவகாசம் வழங்கியும் கூட வழக்கிற்கு தேவையான போதுமான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கவில்லை.

வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்களே தவிர, எந்த வீடியோ, என்ன ஆதாரம் என்பதை நீங்கள் எங்களுக்கு காட்ட மறுக்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களில் நிரூபிக்கும் படியாக தரவுகள் எதில் உள்ளது என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களது வாதம் முழுதும் பொதுவானதாக உள்ளது. மேலும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது. முறையான ஆதாரம் இல்லாமல் நீதிமன்றத்தில் வாதிட வரக்கூடாது.

இந்த வழக்கை நாங்கள் இப்போதே தள்ளுபடி செய்ய முடியும். இருந்தாலும் வழக்கை வரும், 17ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் தேவையான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link