புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்ரல் 2)இரவு அல்லது நாளை காலைக்குள்(வியாழன் இரவு அல்லது வெள்ளி காலைக்குள்) வெளியிடப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்கை கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் பாஜ தவிர, மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் போட்டியிட, அக்கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. முக்கிய தலைவர்கள் தங்களுக்கும், தங்களது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். மேலிட தலைவர்களை பிடித்து, பலர் தொகுதிகளை பெற முயற்சிக்கின்றனர். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வந்தது.
வேட்பாளர்களை ஆலோசனை செய்ய டில்லியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ராகுல், கார்கே, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு டில்லியில் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில், கார்கே, ராகுல் மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசித்து உள்ளோம். 85 சதவீத தொகுதிகளில் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர்.
இன்னும் 15 சதவீதம் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று இரவோ அல்லது நாளை காலையோ வேட்பாளர் பட்டியல் வெளியே வரும். ஓரிரு மணி நேரத்தில் அனைத்து வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
