புதுடில்லி: தலைநகர் டில்லியில் சிதிலம் அடைந்து கிடந்த, 400 ஆண்டுகள் பழமையான பாரபுல்லா பாலம், அதன் பழமை மாறாமல் மத்திய தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டுள்ளது.
டில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு பின்னால், முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாரபுல்லா மேம்பாலம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது.
மத்திய தொல்லியல் துறையின் டில்லி வட்டார ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறியதாவது:
டில்லி துணைநிலை கவர்னராக இருந்த சக்சேனா, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரபுல்லா பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, மிகப்பழமை வாய்ந்த இந்தப் பாலத்தை சீரமைத்து பாதுகாக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டன. பாலத்துக்கு செல்லும் வழியில் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர்.
அவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. பாலத்துக்கு அடியில் ஓடும் பாரபுல்லா கால்வாயில் குப்பைகள் தேங்கி, கழிவுநீர் தேங்கியிருந்தது. அதை சுத்தம் செய்து நீர்வழித் தடம் சீரமைக்கப்பட்டது. பாலம் முழுதும் நிறைந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி, 2025ம் ஆண்டு ஜனவரியில் துவங்கியது.
அதைத் தொடர்ந்து, பாலத்தின் கட்டமைப்பை அதன் பழமை மாறாமல் சீரமைக்கும் பணி 2025ம் ஆண்டு அக்டோபரில் துவக்கப்பட்டது.
பாலத்தின் மீது படிந்திருந்த பல அடுக்குகளான தார் பூச்சுகள் அகற்றப்பட்டன. பாலத்தின் அசல் கட்டுமானப் பொருளான, டில்லி குவார்ட்சைட்’ கல் வெளிப்பட்டது. பாலத்தின் சுவரில் அதன் அசல் கட்டுமானப் பொருளை இப்போது பார்க்கலாம்.
ஆனால், பாலத்தின் மையப்பகுதியில் நடைபாதை, பல ஆண்டுகளாக வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளால் சேதமடைந்திருந்தது. அது, மிகுந்த கவனத்துடன் சீரமைக்கப்பட்டது.
பாலத்தின், 12 தூண்களும் பழமை மாறாமல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி, மதராஸி காலனி மக்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால், நான்கு துாண்கள் கடும் சேதம் அடைந்திருந்தன. அவற்றில் இரண்டு துாண்கள் முற்றிலுமாக சிதைந்திருந்தன. சில துாண்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், சில துாண்கள் அசல் முகலாயக் கட்டடக் கலை வடிவமைப்பிலேயே புதிதாக கட்டப்பட்டன.
பாலத்தின் பாதுகாப்புக்காக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பல சவால்களுக்கு மத்தியில், தொல்லியல் நிபுணர்கள் குழு உதவியுடன் அங்குலம் அங்குலமாக நடந்த சீரமைப்பு பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.
சீரமைப்புக்குப் பின், பாலம் வளைந்த வடிவிலும் மையப்பகுதியில் சற்று உயர்ந்தும் இருப்பதால், செங்குத்தான சரிவு கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, மழைக்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க பாலத்தின் ஒரு பக்கத்தில் புல் வளர்க்கப்படுகிறது.பாலத்தின் பாதுகாப்பு மற்றும் அழகியல் ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாலத்தின் இரு பக்கமும் இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தப் பாலம், அதன் அசல் முகலாயக் கட்டமைப்பில் காட்சியளிக்கிறது. இந்தப் பாலம் பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி பார்வையாளர்கள் உள்ளே வருவதற்கு திறக்கப்படும்.
கி.பி., 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பாலம் யமுனை நதியைக் கடந்து செல்லவும், ஆக்ராவில் இருந்து நிஜாமுதீன் தர்கா மற்றும் ஹுமாயூன் கல்லறை ஆகியவற்றுக்கு வந்து செல்லவும் முகலாயர்களுக்கு ஒரு முக்கியப் பாதையாகப் பயன்பட்டுள்ளது.
பழைய மதுரா சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தில், 11 வளைவுத் துவாரங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம், 12 துாண்களால் கட்டப்பட்டதால், 12 துாண்கள் என பொருள்படும் வகையில், பராபுல்லா என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
முகலாய அரசர் ஜஹாங்கிர் சபையில் தலைமை அமைச்சராக இருந்த மிஹர் பானு ஆஹா என்பவரால் 1621- – 1622-ம் ஆண்டுகளில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
