புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் சமர்ப்பித்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜவுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் செயல்படுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்- திமுக – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘ இண்டி’ கூட்டணி குற்றம்சாட்டியது. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசும் குரல் கொடுத்தது.
ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நோட்டீசில் இண்டி கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், பிடிஐ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இதில் லோக்சபா எம்பிக்கள் 130 பேர், ராஜ்யசபா எம்பிக்கள் 63 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். இண்டி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி எம்பிக்களும் கையெழுத்து போட்டுள்ளனர். கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி எம்பிக்களும், சுயேச்சை எம்பிக்களும் பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.
இந்த தீர்மானத்தில் ஞானேஷ்குமார் மீது’ பதவியில் பாரபட்சம் மற்றும் பாகுபாடு காட்டியது’, ‘தேர்தல் மோசடி குறித்த விசாரணயை வேண்டுமென்றே தடுத்தல்’ மற்றும்’ ஓட்டுப்பறிப்பு’ உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நம் நாட்டு வரலாற்றிலேயே தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. இரு சபைகளிலும் ஆளும் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், ஞானேஷ்குமாருக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் தோற்கடிக்கப்படுவது உறுதி.
