புதுடில்லி: தெலுங்கானாவில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்த, பாரத் ராஷ்ட்ர சமிதியின், 10 எம்.எல்.ஏ.,க்களை தகுதி

புதுடில்லி: தெலுங்கானாவில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்த, பாரத் ராஷ்ட்ர சமிதியின், 10 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது, சட்டசபை சபாநாயகர் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என, எச்சரித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 2023 டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் வென்று, ஆட்சி அமைத்தது.

அதற்கு முன் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தனர்.

இதையடுத்து, பாரத் ராஷ்ட்ர சமிதி சார்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின்படி, மாற்று கட்சிக்கு ஆதரவளித்த 10 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதிநீக்கம் செய்யும்படி சட்டசபையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்த தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத் குமார், இதுவரை எட்டு எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நிராகரித்துள்ளார்.

இதையடுத்து, இவர்கள் பி.ஆர்.எஸ்., உறுப்பினர்களாகவே கருதப்படுவர். மீதம் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சபாநாயகர் கடம் பிரசாத் குமார், தங்களின் மனுக்களை பரிசீலிப்பதை தாமதித்து வருவதாக கூறி பி.ஆர்.எஸ்., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை, கடந்த ஆண்டு ஜூலையில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் ஏ.ஜி.மாஷி அடங்கிய அமர்வு, மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கும்படி தெலுங்கானா சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

எனினும், அக்காலக்கெடுவுக்குள் விசாரணையை நிறைவு செய்யாததால், பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ”தெலுங்கானாவில் நகராட்சித் தேர்தல்கள் நடந்ததால், சபாநாயகரால் உரிய விசாரணை நடத்த முடியவில்லை.

”இன்னும், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மீதான விசாரணை மட்டுமே உள்ளன. எனவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்,” என்றார்.

இதைக்கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘இவ்வழக்கில், ஏற்கனவே பலமுறை கால அவகாசம் அளித்துவிட்டோம். தற்போது, மூன்று வாரங்களுக்குள் முடிவெடுக்கா விட்டால், நீதிமன்ற அவம திப்பை சந்திக்க நேரிடும். இதுவே, எங்களின் இறுதி எச்சரிக்கை’ எனக் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Source link