புதுடில்லி, நட்பாக பழகிய பெண்ணின் வீட்டு சாவியை வாங்கி, அந்த பெண் வீட்டில் இருந்த பொருட்களை சுருட்டிய பெண்

புதுடில்லி, நட்பாக பழகிய பெண்ணின் வீட்டு சாவியை வாங்கி, அந்த பெண் வீட்டில் இருந்த பொருட்களை சுருட்டிய பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவுட்டர் டில்லியின் சுல்தான்புரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 4ம் தேதி, தனக்கு நெருக்கமான பெண் ஒருவரை அணுகினார், இளம்பெண் ஒருவர்.

தனக்கு மெஹந்தி பண்டிகை நடக்க உள்ளது. அதனால், வீட்டின் சாவியை கொடுத்தால், வீட்டின் உள்ளே வைத்து, மெஹந்தி போட்ட பின், சாவியை தந்து விடுவதாக கூறினார்.

அதை உண்மை என நம்பிய அந்த பெண்ணும், தன் வீட்டு சாவியை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.

தன் உறவுக்கார ஆணுடன் அந்த வீட்டில் எளிதாக நுழைந்த அந்த பெண், வீட்டில் இருந்த, 3.5 லட்சம் ரூபாய், ஏராளமான தங்க நகைகளை சுருட்டினார். பின், பர்தா அணிந்து அங்கிருந்து தப்பினார்.

வீடு திரும்பிய அந்த பெண், தன் வீட்டில் இருந்த தங்க நகை, பணம் போன்றவை திருடப்பட்டதை அறிந்து, போலீசில் புகார் அளித்தார். போலீசார், அந்த பெண்ணை தேடி அவரின் வீட்டுக்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.

அதனால், தங்க நகைக்கடைகளில் கண்காணிப்பை போலீசார் மேற்கொண்டனர். அப்போது, ராஜிந்தர், 22, என்ற நபர், அந்த பெண்ணின் வீட்டில் திருடிய நகைகளை கொடுத்து, பணம் பெற முயன்றார்.

அவரை அள்ளிய போலீசார், அந்த பெண்ணின் தற்போதைய இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று, அந்த பெண்ணையும், அவரின் கையில் இருந்த ரொக்க பணம், 1.9 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

தனக்கு நெருக்கமான பெண் வீட்டில் திருடிய பணம், 3.5 லட்சத்தில், 1.6 லட்ச ரூபாயை இரண்டொரு நாட்களில் செலவு செய்திருந்தார்.

நகைகளை ரொக்கமாக மாற்ற முயன்ற போது, தன் உறவினரான வாலிபருடன் சிக்கிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், விசாரிக்கின்றனர்.

Source link