புதுடில்லி: நம் நாட்டின் முதல் ‘ரிங் மெட்ரோ’ எனப்படும், முழு வட்ட வடிவிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை டில்லியில் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
தலைநகர் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு காரணமாக, அங்குள்ள மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், மெட்ரோ போக்குவரத்து பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தினமும், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
முழு வட்ட வழித்தடம்
இந்நிலையில், டில்லியின் இரண்டு புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இதுதவிர, மூன்று புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
டில்லி தீபாலி சவுக் – மஜ்லிஸ் பார்க் இடையே 9.9 கி.மீ., நீளம் உடைய வழித்தடமும், மஜ்லிஸ் பார்க் – மவுஜ்பூர் பாபர்பூர் இடையே 12.3 கி.மீ., நீளம் கொண்ட வழித்தடமும் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
யமுனை ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த வழித்தடத்தில் எட்டு ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இது, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மஜ்லிஸ் பார்க் – -ஷிவ் விஹார் பிங்க் பாதையின் ஒரு பகுதியாகும். தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் மூலம் பிங்க் லைன், 71.56 கி.மீ., நீளம் விரிவடைந்து உள்ளது.
இது டில்லியின் உள் வட்ட சாலை ஒட்டி வட்ட வடிவில் இரட்டை அடுக்காக அமைக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன் வளைவாக இயங்கி வந்த பிங்க் லைன், புதிதாக திறக்கப்பட்ட இந்த வழித்தடத்தின் மூலம் முழு வட்டமாக மாறியுள்ளது.
இதன்மூலம், நம் நாட்டின் முதல் ‘ரிங்’ எனப்படும் வட்ட வடிவ மெட்ரோ வழித்தடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மொத்தம் 18,300 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த ரிங் மெட்ரோ வழித்தடத்தால், டில்லி மக்களின் பயண நேரம் கணிசமாக குறைவதுடன், போக்குவரத்து மாசு கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
புதிய திட்டங்கள்
இதேபோல் டில்லி மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க்கில் இருந்து, இந்திரபிரஸ்தா வரையிலான சென்ட்ரல் விஸ்டா வழித்தடம், ஏரோசிட்டியில் இருந்து இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலைய முதல் முனையம் வரையிலான, கோல்டன் லைன் நீட்டிப்பு உட்பட மூன்று புதிய வழித்தடங்களுக்கும் பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
