புதுடில்லி: நம் நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வரலாற்று

புதுடில்லி: நம் நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடி, 75, படைத்துள்ளார்.

குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என தொடர்ந்து 8,931 நாட்களை கடந்து சேவையாற்றி வருவதன் மூலம், அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக பொது வாழ்வை துவங்கிய நரேந்திர மோடி, குஜராத்தில் தன் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார். 2001 அக்டோபர் 7 முதல், 2014 மே 21 வரை குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து சாதனை புரிந்தார்.

பெருமை

அதன்பின் தேசிய அரசியலுக்குள் நுழைந்த அவர், நாட்டின், 14வது பிரதமராக 2014 மே 26ல் பதவியேற்றார். இதன் மூலம், லோக்சபாவில் பெரும்பான்மை பலம் பெற்ற, காங்., கட்சியைச் சாராத முதல் தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதன்பின், 2019 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வின் வெற்றி பயணம் தொடர, இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்த வகையில், இரு முறை பிரதமர் பதவியில் முழுதாக நீடித்த காங்., கட்சி அல்லாத முதல் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பின், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரே தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக நேற்றுடன் 8,931 நாட்களை பிரதமர் மோடி கடந்துள்ளார். இதன் மூலம், குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் நீண்டகாலம் சேவையாற்றிய ஒரே தலைவர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்துள்ளார்.

பிரதமராக 4,319 நாள், குஜராத் முதல்வராக 4,612 நாள் என மொத்தம் 8,931 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.

Image 1552685

சாம்லிங்

இதற்கு முன், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரான பவன் குமார் சாம்லிங், தொடர்ந்து 8,930 நாட்கள் வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல்வராக இருந்ததே சாதனையாகும். அவர் தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1994 டிச., 12 முதல் 2019 மே 26 வரை, தொடர்ந்து 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதல்வர் பதவியில் நீடித்தார். அந்த சாதனையை பிரதமர் மோடி தற்போது முறியடித்து, நம் நாட்டின் அரசியலில் புதிய மைல்கல்லை எட்டினார்.

அரசியல் மட்டுமின்றி, உலக அளவில் பொதுமக்களின் அபிமானம் பெற்ற தலைவராகவும் பிரதமர் மோடி வலம் வருகிறார். சமூக வலைதளமான, ‘யூ டியூப் சேனலில்’ மட்டும் அவரை 3 கோடி பேர் பின்தொடர்கின்றனர். பிற, சமூக வலைதளங்க ளான, ‘இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘எக்ஸ்’ பக்கங்களில் மட்டும் அவருக்கு, 10 கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்வோர் இருக்கின்றனர். இதன் மூலம் உலக அளவில் அதிகம் பின்தொடரப்படும் அரசியல் தலைவராக பிரதமர் மோடி நீடிக்கிறார்.

பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பதன் மூலம், அவர் நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகள் மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்புகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்து இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற முழக்கத்துடன் அவர் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இந்த நீண்ட நெடிய பயணத்தின் முக்கிய அங்கங்களாக பார்க்கப்படுகின்றன.

விடுமுறை எடுக்காதவர்!

தேசத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும், 24 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடி அயராது பாடுபட்டு வருவது அவரது கடமை உணர்ச்சிக்கு சான்றாக உள்ளது. குஜராத் முதல்வராக மூன்று முறை; பிரதமராக மூன்று முறை பதவி வகித்து வருவதன் மூலம், மக்களின் அன்பை அவர் எந்த அளவிற்கு பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு, ஆதரவு நாளுக்கு நாள் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
-அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

Image 1552686

மோடியின் சாதனைகள்

* 2001 அக்., 7 முதல் 2014 மே 21 வரை குஜராத் முதல்வர்
* 2001, 2002, 2007 மற்றும் 2012 குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி
* 2014 மே 26 முதல் தற்போது வரை பிரதமர்
* 2014, 2019, 2024 என மூன்று முறை பிரதமராக பதவியேற்பு
* முதல்வர், பிரதமர் என 8,931 நாட்கள் அரசு தலைவராக பணியாற்றியுள்ளார்.

அண்ணாமலை பாராட்டு

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: ஒரு அரசின் தலைவராக, 8,931 நாட்கள். கடந்த, 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று பிரதமர் பதவி; குஜராத் முதல்வராக, 12 ஆண்டுகள் இருந்தவர் மோடி. இன்று பிரதமர் மோடி, சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் சார்ம்லிங்கின், 8,930 நாட்கள் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசு தலைவர் என்ற பெருமை பெறுகிறார்.
எளிய பின்னணியில் இருந்து, உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்த அவரது பயணம், துாய்மையான அரசியல், ஊழல் இல்லாத நிர்வாகம், தேசத்திற்கு முதலிடம் என்ற உறுதியான நோக்கத்தால், பொது வாழ்வில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளன. அவரது தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ், பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபா தேர்தல் வெற்றிகளை பெற்றதுடன், வளர்ந்த பாரதம் நோக்கில் மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது.
உலக தெற்கின் தலைவராக நம் நாடு இன்று, உலக அரங்கில் ஈடு இணையற்ற சக்தியாக மாறியுள்ளது. இந்த, 8,931 நாட்கள் பயணம் ஒரு சாதனை மட்டுமல்ல, அது, நம் தேசத்தின் சேவையில் ஸ்திரத்தன்மை, நேர்மை, தளராத அர்ப்பணிப்புக்கான வாழும் சான்று. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link